சென்னை விமான நிலைய வளாகத்தில் பழைய விமான நிலைய பகுதியில் சர்வதேச சரக்கு முனையம் உள்ளது. இங்கு, வெளிநாடுகளுக்கு விமானங்களில் அனுப்புகின்ற சரக்கு பார்சல்கள், கண்டெய்னர்கள், அதைப்போல் வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வருகின்ற பார்சல்கள், கண்டெய்னர்கள் இங்கு கையாளப்படுகின்றன. இந்தச் சரக்கு முனையம் 24 மணி நேரமும் இயங்கும்.
இங்கு நேற்று நள்ளிரவு 11.40 மணிக்கு சிபிஐ அலுவலர்கள் எட்டு பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர். அவர்கள் சரக்கு முனையத்தின் ஏற்றுமதி-இறக்குமதி பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணி வரை சோதனை நடத்தினர்.
மேலும் அங்கு பணியிலிருந்த சரக்கு முனைய அலுவலர்கள், சுங்கத் துறையினரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அத்தோடு முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி கொண்டுசென்றதாகவும் கூறப்படுகிறது.
ஏன் திடீர் சோதனை?
இந்தச் சோதனை எதற்காக நடந்தது? என்பது பற்றி அலுவலர்கள் தரப்பில் எதுவும் கூற மறுக்கின்றனா். ஆனால் சமீபகாலமாக சென்னை விமான நிலைய சரக்குப் பகுதியில் வெளிநாடுகளிலிருந்து பெருமளவு போதைப்பொருள்கள் கடத்தபட்டுவந்தன.
அதைப்போல் சரக்கு விமானங்களில் அனுப்பப்படும் பார்சல்கள், கண்டெய்னர்களில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வந்தன. அதையொட்டி, சிபிஐ இந்த திடீர் சோதனை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.