சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் என்.தேவராஜ். இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவராவார். இவரது மகன் சத்தியப் பிரகாஷ். இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஷிப்பிங் லாஜிஸ்டிக்ஸ் துறையில் டிப்ளோமா முடித்து, அரசுத் துறையில் வேலைத் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு தந்தை, மகன் இருவருக்கும் ரயில் பயணத்தின்போது கே.பூபதி என்பவர் அறிமுகமானார். சென்னை துறைமுகத்தின் தலைமை பொறியாளரின் தனிச் செயலாளராக இருப்பதாக கூறி, கே.பூபதி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
அத்துடன், அங்குள்ள உயர் அலுவலர்களை தனக்கு நன்கு தெரியும் என்றும் தான் நினைத்தால் துறைமுகத்தில் எளிதாக பணி நியமனம் பெற்றுத்தர முடியுமென தெரிவித்தார். தேவ்ராஜ் மற்றும் அவரது மகன் சத்தியப் பிரகாஷிடம் ரூ. 1 கோடியை லஞ்சமாக வழங்கினால் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்ததைக் கூறினார்.
இதனை உண்மை என நம்பிய தேவராஜ் மகனின் வேலைக்காக, 2016 டிசம்பர் 17 முதல் 2019 நவம்பர் 20 வரை பல்வேறு தவணைகளில் ரூ. 97 லட்சம் ரொக்கமாகவும், காசோலையாகவும் பூபதியிடம் கொடுத்துள்ளார்.
இதனிடையே, ஒரு ஆண்டிற்கு மேலாகியும் பூபதி வேலையை வாங்கி கொடுக்கவில்லை. அத்துடன், தேவராஜின் அழைப்பை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். பூபதியின் இந்த செயல் அவர் மீது சந்தேகத்தை வரவழைத்துள்ளது. அது குறித்து விசாரித்தபோது, துறைமுகத்தின் துணைத் தலைவரின் தனிச் செயலாளராக பணியாற்றிவந்த பூபதி, தலைமை பொறியாளரின் தனிச் செயலாளராக வேலை செய்வதாக கூறிய பொய் என தெரியவந்தது.
இதனால் விரக்தியடைந்த தேவராஜ், தான் வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டதற்கு, பூபதி கொடுக்க மறுத்துள்ளார். அதுமட்டுமல்லாது, கடந்த பிப். 27 ஆம் தேதியன்று அடியாள்களை அனுப்பி அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, சென்னை துறைமுகத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தலைமை அலுவலரிடம் தேவராஜ் மற்றும் அவரது மகன் சத்தியப் பிரகாஷ் பூபதிக்கு எதிராக வங்கி ஆவணங்கள், பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். வழக்கு பதிவுசெய்த அலுவலர் விசாரணையை மேற்கொண்டார். அந்த புகாரின் அடிப்படையில், தலைமை பொறியாளரின் தனிச் செயலாளர் பதவியிலிருந்து பூபதி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பணமோசடி நடைபெற்றதற்கான முகாந்திரம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு தற்போது சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் எம். சசிரேகா மேற்கொள்வார் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முதல்கட்ட விசாரணையை நடத்திய சிபிஐ, உதவி போக்குவரத்து மேலாளர் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ரூ. 97 லட்சம் மோசடி செய்த சென்னை துறைமுக அலுவலர் பூபதி மீது ஊழல் தடுப்புச் சட்டம் (1988) பிரிவுகள் 7 மற்றும் 8இன் கீழ் வழக்கு பதிவு செய்தது. பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் சென்னை துறைமுகத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க : 40 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: பரிசல் ஓட்டி கைது!