சென்னை: தலைமை செயலக காலனி காவல் நிலைத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு சென்று சிபிசிஐடி போலீசார் தடயங்களை சேகரித்தனர். முதல் தகவல் அறிக்கை உள்பட ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பெற்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமை செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் நேற்று காலை 11 மணிக்கு எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் முன்பு விசாரணைக்காக காவல் ஆய்வாளர் செந்தில் குமார் ஆஜரானார்.
கடந்த 18ஆம் தேதி இரவு முதல் விக்னேஷ் சந்தேக மரணம் வரை என்னென்ன நடந்தது? என்பது தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் காவல் ஆய்வாளர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தினார். கத்தியுடன் கைது செய்தது தொடர்பாக சுரேஷ், விக்னேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறித்தும், சந்தேக மரணம் குறித்தும் காவல் ஆய்வாளர் செந்தில் குமாரின் வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 18ஆம் தேதி பிரபுவின் ஆட்டோவில் தான் சுரேஷ், விக்னேஷ் வந்துள்ளனர். கெல்லீஸ் சிக்னலில் பிடித்த போது விக்னேஷை காவல்துறையினர் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் பிரபு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் பிரபு விசாரணைக்காக எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆட்டோ ஓட்டுநர் பிரபு விசாரணைக்காக நேற்று மதியம் 2.30 மணியளவில் ஆஜரானார். விசாரணை அதிகாரி டிஎஸ்பி சரவணன் ஆட்டோ ஓட்டுநர் பிரபுவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தார். இரவு 7.30 மணி வரை சிபிசிஐடி போலீசார் ஆட்டோ ஓட்டுநர் பிரபுவிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த 18ஆம் தேதி சுரேஷ், விக்னேஷ் எப்போது ஆட்டோவில் ஏறினார்கள்? இருவரையும் முன்பே தெரியுமா? எந்தெந்த போலீசார் வாகன சோதனையில் மடக்கினர்? புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னலில் நடந்தது என்ன? என்பது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் பிரபுவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அவரது வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக நேரில் அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்றும், அன்று பணியில் போலீசார் குறித்த அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் போது அடையாளம் காட்ட வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர் பிரபுவுக்கு சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில் இறந்து போன விக்னேஷின் சகோதரர் வினோத்திற்கு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பி உள்ளார். சந்தேக மரண வழக்கை எழும்பூர் பெருநகர குற்றவியல் 2ஆவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் யஸ்வந்த் ராவ் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் விக்னேஷின் சகோதரர் வினோத்திற்கு மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பி உள்ளார். வருகிற 6ஆம் தேதி விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது காவல்துறையினர் ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாக பணத்தை வினோத் மாஜிஸ்திரேட்டிடம் வழங்க முடிவு செய்தார். விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர், "விக்னேஷ் மரண வழக்கில் சாட்சியமாக இருக்கக்கூடிய ஆட்டோ ஓட்டுநர் பிரபுவிடம் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரமாக விசாரணை நடத்தினர். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். மீண்டும் சம்பவ இடத்தை காண்பிக்க ஓட்டுநர் பிரபுவை விசாரணைக்கு போலீசார் அழைக்க உள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில் மெரினா காவல் ஆய்வாளர், சுரேஷ் வீட்டிற்கு சென்று மிரட்டுகிறார். ஆட்டோ ஓட்டுநர் பிரபு வீட்டிற்கு சென்று தொல்லை கொடுக்கிறார்.
விக்னேஷ் மரண வழக்கின் விசாரணையை நீதிமன்றம் இன்னும் தொடங்கவில்லை. சிபிசிஐடி பல நாள்களுக்கு பிறகு விசாரணையை தொடங்கியுள்ளது. சாத்தான்குளத்தில் உயிரிழந்த பென்னிக்ஸ் - ஜெயராஜ் உடலில் 14 காயங்கள் இருந்தன. சென்னையில் உயிரிழந்த விக்னேஷின் உடலில் 13 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் வீடியோ பதிவு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வெறும் அறிக்கை மட்டும் மருத்துவ துறை வழங்கி உள்ளது. வீடியோ பதிவை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: Vignesh Lockup Death: 'விக்னேஷ் மரணவழக்கில் 15 நாட்களில் அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளோம்' - அருண் ஹெல்டர் தகவல்