முருகக்கடவுளின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளை, விபச்சாரம், மது அருந்துதல் போன்ற சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாகக் கூறி, திருத்தணியைச் சேர்ந்த ஹர்ஷவர்த்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கரோனா ஊரடங்கு காலத்தில் கோவில் ஊழியர்கள் பெரிய கார்த்தி, குப்பன் ஆகியோர் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளை, சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும், அவர்கள் மீது கோயில் இணை ஆணையர் பழனிகுமார், அறங்காவலர் ஜெய்சங்கர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் ஆதரவளிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, இவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுத்து கோவிலின் புனிதத்தை காக்க வேண்டும் என தனது மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் பள்ளி முதல்வரிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்!