சென்னை: மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் அமைந்துள்ள அயோத்தியா மண்டபம் ராம்சமாஜ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ராம்சமாஜ் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி கடந்த 2014ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலைய துறை முடிவு செய்ததது. இதனை எதிர்த்து ராம்சமாஜ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று (ஏப்ரல் 11) தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அயோத்தியா மண்டபத்தை ஆய்வு செய்து கையகப்படுத்த சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், கரு.நாகராஜன், வினோஜ் பி செல்வம், இந்து முன்னணியை சேர்ந்த இளங்கோவன் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் அயோத்தியா மண்டபத்தின் வாயிலை பூட்டி வெளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்து அறநிலைய துறை அதிகாரிகளை வழிமறித்து உள்ளே அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது அசோக் நகர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். தடையை மீறி செயல்படுதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக மாவட்ட கட்சி - ஈவிகேஎஸ் இளங்கோவன்