சென்னை: வாகன விதிகள் 1989 பிரிவு 50, 51இன் படி மத்திய மோட்டார் வாகனங்களின் நம்பர் பிளேட்களிலுள்ள எழுத்துகள், எண்களின் பிண்ணனி நிறம், அளவு, குறிப்பிட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும் எனவும், நம்பர் பிளேட்களில் சின்னங்கள், வாசகங்கள் அல்லது படங்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமீபகாலமாக அரசு நிர்ணயித்துள்ள விதிகளை மீறி பொதுமக்களில் சிலர் அரசு, காவல் துறை, வழக்கறிஞர், ஊடகம், மனித உரிமைகள் ஆனையம் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி முறைகேடாக பயன்படுத்தி வருவதாக சென்னை காவல் துறைக்குப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
1892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
இந்தப் புகார்களின் அடிப்படையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி நேற்று (அக்.20) போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட தணிக்கையில், வாகனங்களில் பிற வாசகங்கள், படங்கள், சின்னங்கள், அரசு நிர்ணயித்த அளவுகளில்லாமல் நம்பர் பிளேட் பொருத்தியதாக ஆயிரத்து 892 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
காவல் துறை எச்சரிக்கை
அதே போல் வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் வந்த கார் ஒன்றில் அங்கீகாரம் பெற்ற அமைப்பில் இல்லாமல் சட்டவிரோதமாக உலக மனித உரிமை ஆனையம் என பலகை ஒட்டியதாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் (34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல் ஈசிஆர் மீன் மார்க்கெட் அருகே வந்த கார் ஒன்றில் சட்டவிரோதமாக இந்திய தேசிய குற்ற எதிர்ப்பு இணை செயலாளர் என ஸ்டிக்கர் ஒட்டியதாக அந்தக் கார் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய மோட்டார் வாகன விதிகளை மீறி வாகனங்களில் நம்பர் பிளேட் வைத்திருப்போர் மீதும், தேவையற்ற சின்னங்கள் வாசகங்கள் ஒட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் எனப் போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகன கொள்ளையன் கைது; 21 வாகனங்கள் பறிமுதல்!