இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி 6இல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,044 பேர் பாதிக்கப்பட்டு 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் இந்நேரத்தில், ஒருசிலருக்கு பாதிப்புகள் இருந்தால் மற்றவருக்கும் தொற்று ஏற்பட்டு அதனால் மொத்த குடும்பத்தாரும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
அதனால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் பகுதியை அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடுவதால், பாதிக்கப்பட்ட நபர்களை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருப்பதை தடுக்கவும் முடியும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அமர்வில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21 பிரிவின்படி ஒருவரின் விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் தகவல்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்தார். இதையடுத்து, அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் மனுதாரர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு பொருள்கள் கொண்டுவர தடை கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு