சென்னை: 2019ஆம் ஆண்டு மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி கோவை பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது.
இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், ரூபனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
இரதரப்பு வாதங்கள்
தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூபன் தொடர்ந்த வழக்கு, நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூபன் தரப்பில், சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று அந்த இடத்தில் தான் இல்லை என்றும் சிறுமியை தவிர வேறு சாட்சியங்கள் யாரும் இல்லாத நிலையில் தனக்குத் தண்டனை வழங்கப்பட்டது தவறு என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, காவல் துறை தரப்பில் கூறியதாவது, இதே சிறுமியிடம் ஏற்கனவே தவறாக நடக்க முயற்சித்ததாகவும், சிறுமி அளித்த வாக்குமூலம் தெளிவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், குழந்தைகளின் அறியாமையையும், தனிமையுயும் பயன்படுத்திக் குற்றவாளிகள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும்போது, பாதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு நேரடி அல்லது தனிப்பட்ட சாட்சியங்களையோ எதிர்பார்க்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு தள்ளுபடி
மேலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு கோவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது எனக் கூறி, அதை எதிர்த்த ரூபனின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: இருவர் அதிரடி கைது