சென்னை வால்டாக்ஸ் சாலையில் யானைகவுனி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது காரில் எதுமில்லை, ஆனால் கஞ்சா வாசம் அடித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து காரில் தீவிரமாக தேடியபோது, காரில் ரகசிய அறை ஒன்றை உருவாக்கி, அதில் பிளாஸ்டிக் கவரில் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 70 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்தி வந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்குமார், ஸ்டான்லி மற்றும் ஆந்திராவை சேர்ந்த சீனி என்பது தெரியவந்தது.
முக்கிய நபரான மோகன் குமார் கடந்த 1 வருடங்களாக ஆந்திராவிலிருந்து சாலை வழியாக தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தி வந்ததும், ரயில் மூலமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மூவரும் ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு, காரில் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், ரயில் மூலம் கஞ்சாவை அனுப்புவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும்போது போலீசிடம் சிக்கியதாகவும் தெரிவித்தனர். தாங்கள் கடத்திய 70 கிலோ கஞ்சாவை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், அதை 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளா விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் கடத்திய தம்பதியினர் கைது!