சென்னை: 2021 - 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனை நிறைவேற்றும்விதமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ பிரிவில் வைகானசம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
இந்தப் பயிற்சி வகுப்பிற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, இந்து வைணவ கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் உதவித்தொகை
பயிற்சிபெறத் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்குப் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கிப் பயிலவும், இலவச உணவு, சீருடையோடு பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000 உதவித் தொகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் www.hrce.tn.gov.in என்ற அறநிலையத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சைவ சித்தாந்த இலக்கியப் பிரிவு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், விளாத்திகுளம் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் வைணவப் பிரிவு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்தின் முக்கிய அங்கமான இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் தமிழில் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காணாமல் போக ஓடை என்ன மளிகைப் பொருளா? - அமைச்சர் சேகர் பாபு