சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்கா துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலைப் பேணி காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 704 பூங்காக்கள் அமைத்து பராமரித்துவருகிறது. இவற்றில் 540 பூங்காக்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி சார்பில் கூறியதாவது, “ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை, செடி, கொடிகளைச் சரியாக பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி எச்சரிக்கை
மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தகுதியுடைய தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களைத் தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு, பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்களைக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி பூங்கா துறையின் சார்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மேற்குறிப்பிட்ட பராமரிப்புப் பணிகளைச் சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு 31 ஜூலை முதல் 16 அக்டோபர் வரை நான்கு லட்சத்து 96 ஆயிரத்து 317 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள் பராமரிப்புப் பணியில் தொடர்ந்து குறைபாடு, தொய்வு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும்.
குடியிருப்பு நலச்சங்கங்கள் தங்கள் பகுதியிலுள்ள பூங்காக்களைக் கண்காணித்து பூங்காக்களிலுள்ள குறைபாடுகள், புகார்கள் குறித்து மண்டல அலுவலகம் அல்லது வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் அல்லது தலைமையிடத்தில் உள்ள 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கருத்துக் கேட்புக் கூட்டம் - வெளிமாநில செய்தியாளர்களால் ரகளை