சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே காரில் வந்த மணிகண்டனை நிறுத்தி போலிசார் அவரை தாக்கியதோடு, அவதூறாகவும் பேசியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் அதே இடத்தில் பெட்ரோல் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.
விசாரணையில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். சீட் பெல்ட் அணியாமலும், ஓட்டுநருக்கான சீருடை இல்லாமலும் வாகனம் ஓட்டியதால் அவருக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். எனவே அவரது மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாவதாக கூறி உயிரிழந்த மணிகண்டன் தாயாருக்கு இழப்பீடாக ஆறு லட்சம் ரூபாயை, நான்கு வார காலத்திற்குள் வழங்க உத்தரவிட்டார்.
இந்த தொகையை சம்பந்தப்பட்ட காவலர்கள் மூவரிடமிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வசூலிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கணவன் - மனைவி அகம்பாவங்களை விட்டொழிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்