இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்ட அறிக்கையில், 'நடாளுமன்றத் தேர்தலில் அமமுக சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களை உணர்ந்து, எதிர்காலத்தில்,வெற்றிகளைக் குவிக்கும் தாகத்தோடு காத்திருக்கும் உங்களின் எழுச்சிக்கு முதலில் தலை வணங்குகிறேன்.
தேர்தலில் எதிர்கொண்ட சிக்கல்
நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத் தேர்தல்களில், இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் இயக்கமும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்திருக்காது என்று சொல்லும் அளவுக்கு கடும் சோதனைகளை, சதிகளை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. வேட்புமனு தாக்கலுக்கு சில மணி நேரம் முன்புவரை நாம் அரசியல் கட்சியின் வேட்பாளரா? அல்லது சுயேச்சை வேட்பாளரா என்பதைக் கூட உறுதிபடச் சொல்ல முடியாத ஒரு சோதனையை வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்காது.
தோல்வியின் காரணம்?
தேர்தல்களில் நமது கழகத் தோழர்கள் வாக்குப்பதிவு முடியும்வரை விழிப்போடு கண்காணித்து தங்கள் வாக்கையும் பதிவிட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத்களில் நமது இயக்கத்திற்கு பூஜ்ஜியம் வாக்குகளே கிடைத்த, மர்மமும் சந்தேகமும் கலந்த விசித்திரம் ஒருபுறம். எதிரிகளும் துரோகிகளும் இணைந்து கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பை புகுத்தி மக்கள் மனங்களில் நமது இயக்கத்தின் பலம் பற்றி விதைத்த தவறான கருத்து மறுபுறம் என பல விஷயங்கள் நமது வெற்றி பறிப்போகக் காரணமாக இருந்தது.
ஆட்சி அமைப்பது உறுதி!
ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி, பதவி ஆசை காட்டியும் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் நமது இயக்கத்தை பலவீனப்படுத்திவிடலாம் என்ற நப்பாசையுடன் நம்மில் சிலரை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், நமது இயக்கத்திற்கு நிஜமான மக்கள் ஆதரவு இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் வலுவான இயக்கமாக உருப்பெற்று மக்கள் நலன் காக்கும் வகையில் தமிழ்நாட்டில் அமமுக ஆட்சி அமைக்கும்' என்று தெரிவித்துள்ளார்.