தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த குமார், கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து, தேர்தல் விதிகளின்படி ஆறு மாதங்களுக்குள் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், வாக்கு இயந்திரங்களை தயார்படுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்தியப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படும் எனவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறிய சாஹூ, கரோனா பாதிப்புக்கு ஏற்ப தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வீட்டை எழுதித் தரக் கேட்டு மனைவி குடும்பத்தார் மிரட்டல்: மின்வேலை செய்பவர் தற்கொலை