சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்விதத்தில், அரசால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவின்கீழ் 1.1.2019 அன்று முதல் மாநிலம் முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்கள் தயாரித்தல், சேமித்துவைத்து விநியோகித்தல், விற்பனை செய்தல், உபயோகித்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது.
அரசாணையின்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருள்களான உணவு கட்டும் நெகிழித் தாள், தெர்மாகோல் தட்டுகள், நெகிழிக் குவளைகள், நீர் பாக்கெட்டுகள், கொடிகள் என 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு 1.1.2019 முதல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டது.
நெகிழிக்கு மாற்று
இந்த வகையான நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக வாழை இலை, பாக்கு மர இலை, தாமரை இலை, மூங்கில், மரப்பொருள்கள், சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் பாண்டங்கள் போன்ற 12 வகையான பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உபயோகிப்பவர்களிடமிருந்து பொருள்களைப் பறிமுதல்செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்யவும் சுகாதார ஆய்வாளர்கள், அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெகிழிக்கு அபராதம்
தொடர்ந்து தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து பெறக்கூடிய அபராதத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
- தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்தல், சேமித்தல், விநியோகித்தல், விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல் முறை ரூ.25,000, இரண்டாவது முறை ரூ.50,000, மூன்றாவது முறை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- துணிக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்களுக்கு முதல் முறை ரூ.10,000, இரண்டாவது முறை ரூ.15,000, மூன்றாவது முறை ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.
- அங்காடிகள், மருந்தகங்களுக்கு முதல் முறை ரூ.1000, இரண்டாவது முறை ரூ.2000, மூன்றாவது முறை ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
- சிறு வணிக அங்காடிகளுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.200, மூன்றாவது முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட பின்னும் விதியை மீறி நான்காவது முறை தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்தின் தொழில் உரிமம் ரத்துசெய்யப்படும் எனச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,390 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டு, மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.