சென்னை: கர்நாடக மாநில போக்குவரத்து கழக ஓட்டுநரான சபீர் பாஷா,மைசூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (செப். 11) காலை 6 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தடைந்தார். அதேபோல நேற்றிரவு புறப்பட்ட மற்றொரு கர்நாடக மாநில பேருந்தும் மைசூரிலிருந்து இன்று (செப். 12) காலை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தது.
இந்நிலையில் இன்று வந்த பேருந்தின் பின்புற சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் அப்பேருந்தின் ஓட்டுநர் பிரேம் குமார், சபீர் பாஷாவை உதவிக்கு அழைத்துள்ளார். அதன்பேரில் பேருந்தின் பின்புறம் ஜாக்கியைப் பயன்படுத்தி உயர்த்திவிட்டு சபீர் பாஷா பேருந்தின் பழுதை சரிசெய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜாக்கி நழுவி பேருந்து கீழே இறங்கி விபத்திற்குள்ளானது.
இதனால் பேருந்து சபீர் பாஷாவின் நெஞ்சு பகுதியில் இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு சி.எம்.பி.டி காவல் துறையினர் சபீர் பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நூஹ் மதராஸா கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட் - 13 வயது சிறுவனே சக நண்பனை கொலை செய்தது அம்பலம்!