சென்னை: அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுகவில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் சார்பாக புகார் அளித்துள்ளோம். பெருங்களத்தூர் ஸ்ரீராம் குழுமம் பகுதியில் வீடுகள் கட்ட CMDA அனுமதி வழங்கியதற்கு லஞ்சமாக பெற்றுள்ளார்.
லஞ்ச பணம் வைத்திலிங்கத்தின் மகன் பிரபு நிறுவனமான முத்தம்மாள் ரியல் எஸ்டேட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை முத்தம்மாள் ரியல் எஸ்டேட் வருமானம் பூஜியமாக உள்ளதாக தாக்கல் செய்துள்ளனர். வருவாய் பூஜியமாக உள்ள நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குழுமத்தின் பாரத் கோல் கெமிக்கல் நிறுவனம் ரூ. 27.9 கோடி கடனாக கொடுத்துள்ளது.
ஆனால் 2014 ஆம் ஆண்டு பாரத் கோல் நிறுவனம் வங்கியில் வாங்கிய ரூ.280 கோடி கடனை செலுத்த முடியாமல் திவால் ஆகியுள்ளது. திவால் ஆன நிறுவனம் முத்தம்மாள் நிறுவனத்திற்கு கடன் வழங்கியுள்ளது. லஞ்சமாக பெற்ற பணத்தில் திருச்சியில் ரூ.24.2 கோடியில் 4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் பிரபு வாங்குகிறார்.
மொத்தம் 140 இடங்களில் ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் பிளாட் கட்டுவதற்கு ரூ.28 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். இதை ஆய்வு செய்து வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு, ஸ்ரீராம் குழுமம் மற்றும் அப்போது இருந்த CMDA அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: Video: வட்டார வளர்ச்சி அலுவலர் மலைவாழ் மக்களிடம் லஞ்சம் பெறும் வீடியோ!