சென்னை:சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜன் அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கடந்த 14-ம்தேதி அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். அவரிடமிருந்து 35 லட்ச ரூபாய் கட்டுக்கட்டாக ஒரு பையில் வைத்து இருப்பது கண்டெடுக்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் வேலை பார்க்கும் 30 உதவியாளர்களிடம் பதவி உயர்வு வாங்கித் தருவதாகக் கூறி துணை ஆணையர் நடராஜன் வசூலில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
அதில் ஒரு சில உதவியாளர்களிடம் வாங்கிய பணத்தைக் கட்டுக்கட்டாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து நேற்று(16.03.2022) போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் முருகன் என்பவர் தங்கியிருக்கும் சேப்பாக்கம் தனியார் விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறைகாவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையை அடிப்படையாக வைத்து போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜன் மற்றும் உதவியாளர் முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த முதல் தகவல் அறிக்கையில்,
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள துணை ஆய்வுப் பிரிவு அதிகாரி சவுந்தர்ராஜன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் , மேலும் அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
பண்டல்களில் பதுக்கிய லஞ்சப்பணம்
இதனடிப்படையில் சோதனையின் போது 8 பண்டல்களாக தனித்தனியாக பணம் வைக்கப்பட்டு ஒரு பையில் வைத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிலும் போக்குவரத்துத் துறையில் வேலைபார்க்கும் அலுவலர்கள் பெயர் இருந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் ஊழியர்களாக பணிபுரியும் மாதேஸ்வரன் பரமசிவன், தசரதன் சாந்தலட்சுமி முருகன், பிரேம்குமார், சாந்தி மற்றும் பெயர் குறிப்பிடாமல் ஒரு கூட்டுப்பணம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அலுவலகத்திலேயே உதவியாளராக பணிபுரியும் சாந்தி பரமசிவன், பிரேம்குமார் ஆகியோர் சூப்பிரண்ட் பதவி உயர்வுக்காக, தலா 5 லட்சம், 4 லட்சம் மற்றும் மூன்று லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடன் பெற்று துணை ஆணையர் நடராஜனிடம் அளித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
முருகன் என்ற பெயரில் ஐந்து லட்ச ரூபாய் கட்டுக்கட்டாக இருந்தது தொடர்பாக விசாரணை செய்தபோது போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. அப்போது விசாரணை நடக்கும் பொழுது அவர் தலைமறைவானதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதவி உயர்வுக்காக லஞ்சம் வாங்கிய ஆணையர்!
தொடர் விசாரணையில் முருகன் மற்றும் உதவியாளர் தங்கராஜ் ஆகியோர் இணைந்து பலரிடமும் பணத்தை வசூல் செய்து துணை ஆணையர் நடராஜனிடம் கொடுத்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தான் உதவியாளர் முருகன் முக்கியமாக இந்த லஞ்ச விவகாரத்தில் தொடர்பு இருப்பதால், முருகன் தங்கியிருந்த சேப்பாக்கம் தனியார் தங்கும் விடுதியில் சோதனை நடத்தி சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
தர்மபுரி உதவி ஆர்டிஓ தசரதன் மற்றும் சேலம் உதவி ஆர்டிஓ மாதேஸ்வரன் மற்றும் சாந்தலட்சுமி ஆகியோர் தலா ஐந்து லட்ச ரூபாய் கட்டுக் கட்டாகக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இவர்கள் எதற்காகப் பணம் கொடுத்தார்கள் என்பது குறித்து அவர்களிடம் இன்னும் வாக்குமூலம் பெற அணுகும்போது கிடைக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
கூட்டுச் சேர்ந்து வசூல் செய்த உதவியாளர்கள்
இதைத்தவிர மூன்று லட்ச ரூபாய் பெயரைக் குறிப்பிடாமல் கட்டுக்கட்டாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக துணை ஆணையர் நடராஜனிடம் விசாரணை நடத்தியபோது தனக்குத் தெரியாமல் யாரோ கட்டுக்கட்டாக பணத்தை வசூல் செய்து தன் அறையில் வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்குத் திருப்தியான பதில் அளிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
பதவி உயர்வு மட்டுமல்லாது காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் தொடர்பான ஆவணங்களும் துணை ஆணையர் நடராஜன் அறையில் சிக்கி உள்ளதால் அரசு வேலை வாங்கித் தருவதாக வசூல் செய்துள்ளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 30 பேரிடம் பதவி பதவி உயர்வுக்காக வசூல் செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவலில் மூன்று போக்குவரத்துத் துறை உதவியாளர்கள் மட்டுமே பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மீதமுள்ள நபர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு லதா யாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தொடர்பு உள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நெல்லையில் என்கவுன்ட்டர் செய்த ரவுடி உடலை ஆய்வு செய்த நீதிபதி!