சென்னை திருவேற்காடை அடுத்த நூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் டெனிதா. இவருடைய மகன் ஜெரேமியா டெனி. கணவரை பிரிந்து வாழும் டெனிதாவிற்கு அவருடைய உலகமே மகன்தான். குழந்தைகளுக்கே உண்டான குறும்புகளால் எல்லோரையும் ஈர்க்கும் ஜெரேமியா டெனி, அதே நேரத்தில் தன்னுடைய அறிவின் நுட்பத்தால் அனைவரையும் வியக்கவும் வைக்கிறார்.
பள்ளியென்றால் என்னவென்றே அறியாத வயதில், பார்ப்போர் வியக்கும் அளவிற்கு சாதனை படைத்திருக்கிறார். 53 விநாடிகளில் யூனியன் பிரேதசங்கள் உள்ளிட்ட இந்தியாவின் 35 மாநிலங்களின் தலைநகர்களையும் சொல்லும் இவர், இந்த முயற்சிக்காக பல பரிசுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். மேலும், தற்போது கின்னஸ் சாதனை நோக்கி முன்னேறும் இவர், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிரூபித்துள்ளார்.
இது குறித்து சிறுவனின் தாயார் டெனிதா கூறுகையில், "விளையாட்டுத்தனமாகவே நான் முதலில் ஜெரேமிக்கு சொல்லிக் கொடுத்தேன். நாளடைவில் 35 மாநிலங்களையும் அதன் தலைநகரங்களையும் அவன் நினைவில் வைத்துக் கொண்டு என்னிடம் கூறத்தொடங்கினான். பின்னர் இதை ஒரு சாதனையாக்க வேண்டும் என முயற்சி செய்தேன்.
அப்போது சென்னையில் நடைபெற்ற கலாம் விஷன் 2020 என்ற சாதனை நிகழ்ச்சியில், 53 விநாடிகளில் 35 மாநிலங்களின் தலைநகரங்களையும் அவன் சர்வ சாதாரணமாக கூறினான். போட்டியின்போது அவன் வரிசைப்படி மனப்பாடம் செய்திருப்பான் என்ற சந்தேகத்தில், மாநிலங்களின் பெயர்களை மாற்றி மாற்றி கேட்டபோதும் அதற்கு அவன் தலைநகரங்களை சரியாகவும் நேர்த்தியாகவும் கூறினான்" என்றார்.
இதற்கு முன்பு 1.40 விநாடிகளில் 35 மாநிலங்களின் தலைநகரங்களை 3 1/2 வயது சிறுவன் கூறியதே சாதனையாக இருந்துவந்த நிலையில், தற்போது தன்னுடைய மகன் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் டெனிதா விண்ணப்பித்துள்ளார். தனது மகனை மிகப்பெரிய வெற்றியாளராக ஆக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பள்ளிக்குச் செல்லும் முன்பே பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரனாக மாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: பருவ மாற்றங்களை கண்டறியும் செயற்கைக்கோள்! பள்ளி மாணவிகள் அசத்தல்!