சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி. குமரப்பனுக்கு, டெல்லியைச் சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பாலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், தான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவன் என்றும் நேரத்துக்குத் தகுந்த மாதிரி இடத்துக்கு இடம் மாறும் தான் செப்டம்பர் 30ஆம் தேதி தனது மகனுடன் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தலைமை பதிவாளர் சி.குமரப்பன் உயர்நீதிமன்ற காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து உயர்நீதிமன்ற பாதுகாப்புக் குழு ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை பாதுக்காப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் தற்போது கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் தங்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் வாகனங்களும் பரிசோதனைக்குப் பிறகே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும், இந்த சோதனைகளுக்கு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.