சென்னை: தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று 6671 பேர் சிறுநீரகத்திற்கும், நுரையீரல் பாதிக்கப்பட்ட 322 பேரும், இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு 37 பேரும், இரண்டு நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் 30 பேரும், இதயம் மற்றும் 2 நுரையீரல் பாதிக்கப்பட்ட 18 பேரும், கணையம் பாதிக்கப்பட்ட 2 பேரும், 24 பேர் கைகளுக்காவும் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மூளைச்சாவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை விரிவுபடுத்தி, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கடந்த 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி அமல்படுத்துவதற்காக ஒரு அமைப்பைப் பதிவு பெற்ற சங்கமாக அரசு உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மருத்துவர் காந்திமதி கூறும்போது, “தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்து வந்தனர். நோயினால் பாதிக்கப்பட்டு, தானம் பெற விரும்பும் நோயாளிகளின் விவரங்களை மருத்துவமனையின் மருத்துவர்கள் இணையத்தில் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் 13 அரசு மருத்துவமனைகள்,120 தனியார் மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்நிலையில் உடல் உறுப்பு தேவைக்காக ஒரே நோயாளி 10 மருத்துவமனைகளில் பதிவு செய்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும் திட்டமிடப்பட்டது. அதற்காக ஆணையத்தின் இணையப்பதிவின்போது ஆதார் எண் இணைக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் நோயாளியின் விவரங்களை மருத்துவமனையில் பதிவு செய்யும் போதே அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் சென்றுவிடும்.
மேலும் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் செயல்களை மேலும் எளிமையாக்கும் வகையில் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான மாெபைல் செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர். அந்த ஆப் மூலம் மருத்துவமனையில் மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்யும்போதே உறுப்பு தேவை என்பதை பதிவு செய்ய முடியும்.
இப்போது ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் , நோயாளிக்கும் முழு விவரம் சென்று விடும். பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில் உடனடியாக யாருக்கு உறுப்பு தேவை என்பதையும், முதலில் பதிவு செய்தவர்கள் யார் என்பதையும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானமாக பெறப்படும்போது, அவரின் உறுப்புகளை நோயாளிக்கு ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மையை மாநிலம் முழுவதும் கொண்டு வர உள்ளோம். ஏற்கெனவே ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மை இருந்தாலும் அதில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. தற்பொழுது உடல் உறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்கு முன்னர் நோயாளிகள் பதிவு செய்துள்ள 5 மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின் முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டு, முதலில் தகவல் அளிக்கப்படும். அவர்களில் முதலில் இருக்கும் நோயாளிக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய முடியாவிட்டால், அடுத்த நோயாளிக்கு அளிக்கப்படும். முன்னுரிமைப்பட்டியல் அளிக்கும்போது, நோயாளியின் வயது, பதிவு செய்த நாள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும், இதனால் பிற மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் தெரிந்துகொள்ள முடியும்.
பதிவு செய்த நோயாளியின் பதிவில் மருத்துவமனையால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பதிவும் அவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். இதனால் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுப்பு ஒதுக்கீடு செய்வதில் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயர்நீதிமன்றம் முன்பே ஆக்கிரமிப்பா?-அதிரடி உத்தரவு