சென்னை: திருநின்றவூர் சிடிஎச் சாலையில் ஒரு சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதில், திருநின்றவூர் பெரியார் நகரைச் சேர்ந்த பானு என்பவர் காலிஃபிளவர் பக்கோடா வாங்கியுள்ளார்.
பின்னர், அதனை வீட்டுக்கு எடுத்துச்சென்று சாப்பிட்டபோது, அதில் காயத்திற்கு ஒட்டப்படும் மெடிக்கல் பேண்டேஜ் ரத்தக்கறையுடன் இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட்டிற்குச்சென்று புகார் அளித்துள்ளார். இதில் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
கோரிக்கை வைத்த பெண்
இதுகுறித்து அந்த வாடிக்கையாளர் பானு கூறும்போது, 'சூப்பர் மார்க்கெட்டில் குழந்தைகள் முதல் முதியவர் வரை உண்ணும் பல பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் காலிஃபிளவர் பக்கோடா தனது மகளுக்கு வாங்கிச் சென்றபோது, அதை உண்ட எனது மகள் வாயில் ரத்தத்துடன் இந்த பேண்டேஜ் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட்டில் தெரிவித்தபோது, அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கடையில் சோதனை செய்தனர்.
கடையில் சோதனை செய்த உணவு பாதுகாப்புத் துறை
அப்போது கெட்டுப்போன உருளைக்கிழங்கு, கருகிய எண்ணெய், பூச்சி இருந்த மாவு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைத்து மாதிரிகளையும் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் உரிய பதிலளிக்க வேண்டும் என அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சவ்வரிசி கலப்படம்: அறிக்கைத் தாக்கல்செய்ய உணவுத் துறைக்கு உத்தரவு