சென்னை: கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று (ஏப். 17) செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த ஏப். 6ஆம் தேதி, பாஜக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து 15 நாள்களாக அரசு திட்டம் குறித்து பயனாளிகளுக்கு, கட்சி நிர்வாகிகள் எடுத்துக்கூறி வருகின்றனர்.
ஜன்தன் திட்டம்: பிரதமர் மோடியின் அடிப்படை சித்தாந்தம், ஒருவரை பொருளாதார ரீதியாக மேம்பாடுத்தாமல், சலுகை திட்டங்கள் மேம்பாடுத்த முடியாது என்பதுதான். அதை மனதில் கொண்டே 'பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா' திட்டம் உருவானது. இத்திட்டத்தின் மூலம் 45.11 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.
மோடி பொறுப்பேற்கும் முன் இந்தியாவில் 3 கோடி பேரிடம் மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி பணம் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 794 பேர் ஜன்தன் கணக்கு தொடங்கியுள்ளனர்.
ஜன்தன் திட்டத்தில் 66 விழுக்காட்டினர் பெண்கள்தான். 45.11 கோடியில், 86 விழுக்காடு கணக்கு செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவில் 91 விழுக்காடு பரிவர்த்தனை டிஜிட்டல் மூலமே நடக்கிறது.
அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 முதல் 40 வயதினர் வரை இணையலாம். அவர்களுக்கு 60 வயது முதல் ஓய்வூதியம் கிடைக்கும். முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்களில் 68 விழுக்காட்டினர் பெண்கள்தான். கடன் பெற்றதில் 86 விழுக்காட்டினர் சிறு தொழில் முனைவோர்.
சொன்னதை செய்யும் மோடி அரசு: 'Stand up India' மூலம் மகளிர், பட்டியலின, பழங்குடி மக்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இரண்டரை லட்சம் பேர் கடன் பெற்று தொழில் தொடங்கியுள்ளனர். இத்திட்டம் மூலம் 30 ஆயிரத்து 160 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தீனதயாள் அந்தியோதயா திட்டம் மூலம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 915 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில், 'ஆப் கி பைசா' எனும் பெயரில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் கொண்டு வந்தனர். அது தோற்றுப் போனதாக மன்மோகன் சிங்கே ஒப்புக் கொண்டார். ஒரு விசயத்தை முடிவு செய்துவிட்டால், அதை செயல்படுத்தும் அரசாக மோடியின் அரசு உள்ளது.
தமிழுக்கு எதிரான அரசு: இளையராஜாவுக்கு தனது கருத்தை தெரிவிக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால், 'திராவிடியன் ஸ்டாக்' தான் நினைக்கும் கருத்தைதான் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றது. மத்திய அரசுக்கு எதிராக 'Go Back Modi' என்பது போன்று, பல ஆண்டுகளாக திட்டமிட்டு தமிழ்நாட்டில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். அதை இளையராஜாவின் கருத்து மாற்றிவிடும் என்பதால்தான் இளையராஜாவை இழிவுபடுத்துகின்றனர்.
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடிய பாரதியாரின் சிலை திறப்பில் அரசு கலந்து கொள்ளவில்லை. ஆனால், தமிழை காட்டுமிராண்டி, சனியன் மொழி என்று சொன்ன ஈவெராவுக்கு ஊர் முழுவதும் சிலை திறக்கும் 'ANTI TAMIL GOVERNMENT' (தமிழுக்கு எதிரான அரசு) ஆட்சியில் இருக்கிறது.
திருமா மீது தாக்கு: நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகு, சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றுவது மக்களை ஏமாற்றும் வீண் முயற்சி. காஷ்மீரி ஃபைல்ஸ் போல, கோவை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு ஃபைல்ஸ் திரைப்படம் எடுக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் என்ற பெயர் தமிழா...? மோடி குறித்து இளையராஜா சொன்னது இயல்பான கருத்து. ஆனால், ரகுமான் இணைப்பு மொழி குறித்து சொன்னது மோட்டிவேசன் காரணமாக கூறிய கருத்து.
சரக்கு மிடுக்கு பேச்சு பேசி, டெல்லியில் இருந்தபடியே தென் மாவட்டங்களை கொளுத்துவேன் என்று கூறியவர் திருமாவளவன். அவர் ஒரு தீய சக்தி. பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்தை மோடி அரசு விரைவுபடுத்தியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சி திமுகவில் இல்லை. திமுகவினர் அதிகார வரம்பை மீறி பேசுகின்றனர். மத்திய பட்டியலில் மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது. பொதுப் பட்டியலில் மத்திய, மாநில அரசு தனித்தனியே சட்டம் இயற்றினாலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதை மீற முடியாது.
சட்டப்பேரவையில், மசோதா நிறைவேற்றுவது வீண் முயற்சி, மக்களை ஏமாற்றும் முயற்சி. 2017இல் இதேபோல தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு காலக்கெடு இல்லை.
திராவிடர்தான் ஆள்வார்கள்: பிரதமரும் திமுகவிற்கு 1976, 1991இல் பாடம் கற்பிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறேன். யார் திராவிடர்? திராவிடம் என்பது இனமா, இடமா...? நானும் திராவிடன்தான். ராமாயணம் கட்டுக்கதை, ஆனால் ராவணன் தமிழரா...?. குஜராத் கூட திராவிட பிரதேசம்தான். எனவே பிரதமரே திராவிடர்தான். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் , அண்ணாமலை அனைவருமே திராவிடர்கள்தான். எனவே, திராவிடர்தான் தமிழ்நாட்டை ஆள்வார்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி ஹனுமன் பேரணி கலவரம்: 14 பேர் கைது, நிலமை என்ன?