ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைக்க அனைத்து மாநில மக்களும் ‘இந்தி’ மொழியை கற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக அவர் இன்று விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையே, அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 20ஆம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது. அதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆளுநரின் அழைப்பை ஏற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின்போது, எக்காரணத்தை முன்னிட்டும் இந்தி திணிக்கப்படமாட்டாது என்றும், அமித் ஷாவின் நோக்கம் அதுவல்ல எனவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார். மேலும், திமுக நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததாகவும், அதனடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “20ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது எதிர்பார்த்ததுதான். இன்று அமித் ஷா விளக்கம் அளித்துள்ளதாக கூறுபவர்கள் அவரது முழு பேச்சையும் கேட்காமல் அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதை கடந்த 4 நாட்களாக பத்திரிகையாளர் கூட்டம் மற்றும் சமூக வலைதளங்களில் நான் பதிவிட்டுள்ளதை நினைவுகூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.