சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய மாநில பாஜக தலைவர் முருகன், "பாஜகவில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் விஜயகுமாரை வரவேற்கிறேன்.
தமிழ்நாடு அரசியலில் பாஜகவின் பங்கு மிக முக்கியமான ஒன்று. தேசியத் தலைவர்களான மோடி, அமித் ஷா, நட்டா உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுவருகின்றனர்.
அதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (பிப். 28) உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுடன் இணைந்து வெற்றியைப் பெற முனைப்புடன் செயல்பட்டுவருகிறோம்.
வெற்றிக்கொடி ஏந்தி நடைபோடுவோம் என்ற நிகழ்ச்சியில் தேசியத் தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களில் நாளை (மார்ச் 2) பங்கேற்கவுள்ளனர்.
கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. தொகுதிப்பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு நாள்களில் தொகுதிப்பங்கீடு தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
உலக அளவிலான பொருளாதார மந்தநிலையின் காரணமாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களே இந்த விலையை நிர்ணயிக்கின்றன. விலையேற்றம் என்பது நிரந்தரமானது அல்ல; மத்திய, மாநில அரசுகள் இதைத் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றன. விரைவில் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வினால் தேர்தலிலோ எங்கள் வெற்றிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
அமமுக, அதிமுகவுடன் இணையுமா என்பது பற்றி அதிமுக தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும். இது குறித்து நான் கூற எதுவும் இல்லை. தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது பற்றி அதிமுக தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மோடியின் உறுதி ஊக்கம் அளிக்கிறது - பாரத் பயோடெக் புகழாரம்