சென்னை: திருவான்மியூர் கண்ணப்ப நகர் விரிவாக்கம் பகுதியில், ‘டெக்கன் நந்தினி வில்லா கார்டன்’ என்ற பெயரில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்பு உள்ளது. இதன் உரிமையாளர் அமர் பின் அகம்து பக்ரைபா என்பவர் துபாயில் பணி புரிவதால் 2007ஆம் ஆண்டு தனது மாமனார் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பெயரில் இந்த சொத்தை பொது அதிகாரம் கொடுத்துள்ளார்.
அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இறந்ததால், அவரது மனைவி லீனா பெர்னாண்டஸிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் லீனா பெர்னாண்டஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது சொத்தை பாஜக நிர்வாகி அபகரிக்க முயல்வதாக புகார் ஒன்றை அளித்தார்.
பாஜக நிர்வாகி மோசடி
அதில், 2018ஆம் ஆண்டு பாஜகவைச் சேர்ந்த சிவ. அரவிந்த் என்ற வழக்கறிஞருக்கு வீடு வாடகைக்கு விடப்பட்டது. இவர் அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். 2 லட்சம் ரூபாய் முன் தொகையும், மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை என்ற அடிப்படையில், சிவ. அரவிந்த்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
முதல் நான்கு மாதங்கள் வாடகை தந்த சிவ. அரவிந்த் அதன் பிறகு வாடகை தரவில்லை. இது குறித்து அவரிடம் விசாரித்தபோது வீட்டை மேல் வாடகைக்கு ஒருவருக்கு கொடுத்ததாக கூறினார்.
சிறையில் அடைப்பு
17 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு சிவ. அரவிந்த் மோசடி செய்து வாடகைக்கு விட்டுள்ளார். இது தொடர்பாக சிவ. அரவிந்திடம் கேட்டபோது தன்னை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் துறையினர், சிவ. அரவிந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இன்று (செப்.23) சிவ. அரவிந்தை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோயிலுக்குள் நுழைந்த 2 வயது தலித் சிறுவன்- ரூ. 25ஆயிரம் அபராதம் விதித்த 5 பேர் கைது