சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகளை கைப்பற்றியது. இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிசான் ரெட்டி தலைமையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
எல்.முருகன் அறிவிப்பு
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், "தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்றார்கள். தற்போது தாமரை மலர்ந்துள்ளது.
சட்டப்பேரவையைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருப்பார்கள். பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு தாவிய நயினார்
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை விட 23 ஆயிரத்து 107 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்த இவர், 2001, 2011ஆம் ஆண்டு தேர்தல்களில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவர் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.