சென்னை: மறைமலைநகர் அருகே சட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷெல்டன் ஜான்(19). இவர், நேபாளத்தில் நடைபெற்ற யுனைட்டட் இன்டர்நேஷனல் சம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெற்று 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றார்.
அவருக்கு தாம்பரம் தனியார் மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் நினைவு பரிசு வழங்கி மாலை அணிவித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இதில், செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் சுப்ரமணியம் கலந்துகொண்டு மாணவருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும், தொடர் முயற்சி செய்து ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கங்களைப் பெற்று தர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷெல்டன் ஜான், " 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோரின் ஒத்துழைப்பால்தான் நான் வெற்றி பெற்றுள்ளேன். நான் மிகவும் கஷ்டப்பட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன்.
தமிழ்நாடு அரசு உதவி செய்தால் ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவிற்காக பதக்கங்களை வெல்வேன். என் போன்று பல விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். அவர்களை தமிழ்நாடு அரசு கண்டறிந்து உதவி செய்தால் அவர்களும் பல பதக்கங்களை வாங்குவார்கள். இதுபோன்ற பாராட்டுக்கள் எனக்கு ஊக்கம் அளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: PARALYMPIC SHOOTING: சீறினார் சிங்ராஜ்; வென்றார் வெண்கலம்!