நாங்குநேரி தொகுதி
2016இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் சார்பாக வசந்த குமார் போட்டியிட்டார்.
மொத்தம் பதிவான ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 470 வாக்குகளில் 74 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று வசந்தகுமார் வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை 57 ஆயிரத்து 617 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் பெற்றார்.
இதைத்தொடந்து நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டுவந்த வசந்தகுமார், கடந்த ஏப்ரலில் நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை உறுப்பினர் பதவிக்காக மீண்டும் போட்டியிட்டார்.
இதில், ஆறு லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று வசந்தகுமார் வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மூன்று லட்சத்து 67 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இதையடுத்து, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், நாங்குநேரி தொகுதி காலியாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
விக்கிரவாண்டி தொகுதி
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் திமுக வேட்பாளர் ராதாமணி.
இவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 757. இவருக்கு அடுத்து அதிமுக வேட்பாளர் ஆர். வேலு 56 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ராதாமணி, மீண்டும் 2016 தேர்தலில் வெற்றி வாகை சூடினார்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் ராதாமணி காலமானார். இதனைத் தொடர்ந்து இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு
ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் அந்த இரு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து தமிழ்நாட்டில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அக்டோபர் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 30ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது.
வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 3ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையும் தெரிவித்துள்ளது.
தேர்தல் விதிமுறை அமல்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இங்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.