சென்னை: அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பிகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்கள் எரிப்பு, சூறையாடுதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த நிலையில், சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்தில் இருக்கும் சென்னை சென்ட்ரல், எக்மோர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரயில்வே சொத்துக்கள் சேதமடைவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.