சென்னை: இந்தியா விமான நிலையங்களின் அந்தந்த உள்ளூர் காவல் துறை வசமிருந்த பாதுகாப்பு பொறுப்புகள், கடந்த 1999ஆம் ஆண்டில் டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள் காட்மாண்டுக்கு கடத்திச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து தலைகீழாக மாறின.
இச்சம்பவத்திற்குப் பின், நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் உள்பட பாதுகாப்பை பலப்படுத்த அப்போதைய மத்திய அரசு முடிவு செய்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force - CISF) வசம் விமான நிலையங்களில் பாதுகாப்பை ஒப்படைத்தனர். அதன்படி, சென்னை விமான நிலைய பாதுகாப்பும் கடந்த 1999ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வசம் சென்றது.
பாதுகாப்பில் மாற்றம்: முதலில் 650 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் தொடங்கிப் பின், படிப்படியாக உயர்ந்து தற்போது 1500 பேருடன் சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போதைய ஒன்றிய அரசு விமான நிலையங்களின் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த மிக முக்கியமான பகுதிகளில் மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் மற்ற பகுதிகளில் தனியார் பாதுகாப்பு படையையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
பாதுகாப்பு பணிகளில் 30% பேர் குறைப்பு: அவ்வாறு தனியாா் பாதுகாப்பு படை வீரர்கள் தோ்வு செய்யப்படும்போது முன்னாள் ராணுவத்தினரை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் தற்போது உள்ள ஆயிரத்து 500 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்களில் 30விழுக்காடாக 450 பேர் குறைக்க முடிவு எடுக்கப்பட்டு, காலி இடங்களில் தனியார் பாதுகாப்பு படையினர் சென்னை விமான நிலையத்தில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
50 பாதுகாப்பு படையினர் பணியமர்த்தல்: அதற்கான உத்தரவை பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (Bureau of Civil Aviation Security - BCAS) தலைமை அலுவலகம் பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் முதற்கட்டமாக 50 தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விமான நிலைய இயக்குநர் சரத்குமார் பணி சான்றிதழ் வழங்கினார். மேலும், அவர்களுக்கு இரண்டு வார காலம் சென்னை விமான நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பின்பு விமான நிலைய பாதுகாப்புக்கும் பணியைத் தொடர்ந்து, இவ்வீரா்கள் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு நடக்கும் பாதுகாப்பு சோதனை, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை பகுதி, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, சரக்கு பார்சல் பாதுகாப்பு பகுதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வழக்கம்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுவர். ஆனால், பயணிகள் உள்ளே செல்லும்போது டிக்கெட் பரிசோதித்து அனுப்புவது, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, கார் பார்க்கிங் பகுதியில் பாதுகாப்பு போன்ற பணிகளில் புதிதாக தேர்வான, தனியார் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுவர் என்று கூறப்படுகிறது.
விமான நிலைய தரப்பு விளக்கம்: இதனால், விமான நிலைய பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகை கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியிலிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை குறைப்பது சரியானது அல்ல என்றும் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையம் தரப்பில் இதுபற்றி கூறப்படுவதாவது, “மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் 30 விழுக்காடாக குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குறைக்கப்படமாட்டார்கள். தனியார் பாதுகாப்பு படையினர் புதிதாக பணிக்கு சேர்க்கப்படுவது, கூடுதல் பாதுகாப்பிற்காகவே” என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் தொழில் தொடங்க கொரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு