சிட்டி யூனியன் வங்கியின் 116 ஆவது தொடக்கவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி காமக்கோடி, வங்கியின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள், பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காமக்கோடி, இந்த வங்கி தொடங்கப்பட்டு 115 ஆண்டுகளில் இதுவரை ஒரு முறைகூட நஷ்டத்தை சந்திக்கவில்லை என்றும், தொடர்ந்து லாபம் ஈட்டி பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது என்றும் கூறினார். மேலும் இதுவரை ஒருமுறை கூட வேலை நிறுத்தப் போராட்டத்தால் வங்கி சேவை பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கியின் முக்கிய நோக்கம் என்பது வணிகம் செய்வது அல்லது சேவை புரிவது எனவும் காமக்கோடி கருத்து தெரிவித்தார். பின்னர், சிட்டி யூனியன் வங்கியின் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட லக்ஷமி சேட் பாட் செயலி சேவை தொடங்கப்பட்டது. இந்த செயலி, வாடிக்கையாளர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலிடும் வாய் மொழி உத்தரவுக்கு ஏற்ப சேவைகள் வழங்கும்.
வாய் மொழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது, கணக்கை முடக்குவது, கணக்கின் இருப்புத் தொகையை அறிந்துகொள்வது ஆகிய சேவைகளைப் பெற முடியும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
ஒரு வங்கியை 100 ஆண்டுகள் நடத்துவதே சாதனைதான். சிட்டி யூனியன் வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருகிறது. கடந்த 1930-களிலும், பின்பு 2008- இல் கிரேட் டிப்ரஷன் எனப்படும் உலக பெரும் பொருளாதார மந்த நிலையின்போதும் சிட்டி யூனியன் வங்கி வெற்றிகரமாக இயங்கியுள்ளது. வங்கிகள் தங்களது பலம் எது என அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
வங்கிகள் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதைக் காட்டிலும் மதிப்பு கூட்டு சேவை வழங்குவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதுவே தற்போதைய தேவை. இந்த வங்கி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தாமல் தரமான சேவை வழங்குவதில் கவனம் செலுத்துவது சிட்டி யூனியன் வங்கியின் பலம் என்றார்.
இதையும் படிங்க: பேராசிரியர் பாலகுருசாமி போன்று வாழ்க்கை நடத்துவது கடினம் - நிர்மலா சீதாராமன்