சென்னை: சென்னை கோயம்பேட்டில் மூன்று மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், பணத்திற்காக குழந்தையை விற்க முயன்ற கும்பலை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 9ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் கூலித்தொழிலாளி ரமேஷ் என்பவரின் மூன்று மாத குழந்தை கடத்தப்பட்டது. இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், குழந்தையை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முள்புதரில் கண்டெடுக்கப்பட்டு காவலர்கள் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குழந்தையைக் கடத்திய நபர்கள் யார் என தொடர்ந்து விசாரணை செய்துவந்தனர். விசாரணையில் ஆறு பேர் கொண்ட கடத்தல் கும்பலை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் பாபு, பாபுவின் மனைவி காயத்ரி, 16 வயது மகன் ஆகியோரும், கடத்தலுக்கு உடந்தையாகவும் காரணமாகவும் இருந்த செங்குட்டுவன், கணேஷ், மேலும் 16 வயது சிறுவன் என ஆறு பேரை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
பாபு, காயத்ரி, அவர்களது மகன், கோயம்பேடு சந்தையில் நோட்டமிட்டு ரமேஷின் மூன்று மாத குழந்தையை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணேஷ் செங்குட்டுவன், 16 வயது சிறுவன் மூலமாக 10 லட்ச ரூபாய் பணத்திற்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. குழந்தையை சட்டப்படி தத்து கேட்டவர்களுக்கு காசுக்காக விற்க முயன்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை விற்க முடியாததால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குழந்தையைப் போட்டுவிட்டு, கடத்திய கும்பலே காவலருக்கு பொதுமக்கள்போல் தொடர்புகொண்டு தகவல் கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து இவர்களைக் காவலில் எடுத்து விசாரித்தால் எத்தனை குழந்தைகளைக் கடத்திவிற்றுள்ளார்கள் என்பது குறித்து தெரியவரும் எனக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு! கடத்தல்காரர்களிடம் தொடரும் விசாரணை!