அரசியலமைப்பு சட்டத்தின் 326ஆவது பிரிவின்படி 18 வயதுக்கு குறையாத, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. (மனநலம் குன்றியவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் தவிர) வாக்களிக்க 21 வயதாக இருந்து வந்த வயது வரம்பு, 1989 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 18 வயதாக குறைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
18 வயது பூர்த்தியடைந்த தகுதியான அனைத்து வாக்காளர்களையும் கண்டறிவதற்கும், அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், வாக்காளர் புகைப்பட அட்டைகளை வழங்குவதற்கும், தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வாக்காளர் யாரும் விடுபடக்கூடாது என்னும் குறிக்கோளுடன் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கும் வகையில் முறையான அறிவூட்டல், அதி நவீன தொழில்நுட்பம் உள்ளிட்டவை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு பரப்புரை
வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டலை (SVEEP), மேலும் தீவிரப்படுத்த 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது தேசிய பல்வகை ஊடகப் பரப்புரை தொடங்கப்பட்டது. மின்னணு ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் நாளிதழ் மூலம் பரப்புரை செய்யப்பட்டது. இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
அதிகரித்த வாக்குப்பதிவு
2019ஆம் ஆண்டுக்கான இந்திய பொதுத்தேர்தல் மார்ச் 19 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவாக, மொத்த வாக்காளர்களில் 67.47% பேர் வாக்களித்தனர். இந்த தேர்தல், உலக ஜனநாயக நாடுகளிலேயே மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மிகப்பெரிய செயல்முறை என வரலாற்றில் இடம்பெற்றது.
2009ஆம் ஆண்டில் 58.21% ஆக இருந்த வாக்குப்பதிவு விழுக்காடு 2014ஆம் ஆண்டில் 66.44 %ஆக அதிகரித்து.
2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 83.4 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 91 கோடியாக அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முயற்சி காரணமாக, சுமார் 7.46 கோடி வாக்காளர்கள் அதிகமாகியுள்ளனர். இதில் 4.07 கோடி பெண் வாக்காளர்களும், 3.3 கோடி ஆண் வாக்காளர்களும் அடங்குவர்.
வாக்காளர் பட்டியல்
இதேபோல் தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண்கள். 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண்கள். 7 ஆயிரத்து 246 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
கூடுதல் வாக்காளர்கள்
கடந்த 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.10 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.33 லட்சம் ஆகும்.
அதேவேளையில் 2019ஆம் ஆண்டு 5.91 வாக்காளர்கள் இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சைகை காட்டிய அமித்ஷா.. போலீஸ் பாதுகாப்புக்கு சிக்கல்..