துக்ளக் பத்திரிகையின் 51ஆவது ஆண்டு விழா ஜனவரி 14ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும் யார் காலையோ பிடித்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் என்றும் விமர்சித்தார்.
மேலும், ஊழல் செய்பவர்களை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை என்றும் தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் இதுபோன்று தவறுகள் நடைபெறாது எனவும் குருமூர்த்தி பேசியிருந்தர்.
இந்நிலையில், நீதித்துறையையும், நீதிபதிகளையும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அமர்வில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் முறையீடு செய்தார். இதையேற்ற நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் வழக்கை விசாரிப்பதாக கூறினர்.