முகப்பேரில் உள்ள ஆந்திரா வங்கி ஏ டி எம்-இல் கொள்ளை முயற்சி நடைபெற்றது. காவல்துறையினர் உடனடியாக சென்றதால் பலலட்சம் ரூபாய் பணம் தப்பியது.
சென்னை ஜெ.ஜெ.நகர் 10ஆவது பிளாக்கில் ஆந்திரா வங்கி ஏடிஎம்மை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற தர்மபுரி- அரூரைச் சேர்ந்த சிலம்பரசன் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார். அபாயமணி மணி ஒலித்ததால் மும்பையில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இவரிடம் இருந்து சுத்தியல், கிரில்கட்டிங் இயந்திரம், கூர்மையான கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருட வந்த நபர் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து முடித்த சிலம்பரசன் என்றும், கோவை மற்றும் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர், நெற்குன்றத்தில் அரிசிக் கடை வைத்து, அதில் இழப்பு ஏற்பட்டு, சுமார் ஆறு லட்சம் கடனாளியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடனை செலுத்துவதற்காக ஏடிஎம்மை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றதாக ஜெ.ஜெ.நகர் காவல் துறையினரிடம் சிலம்பரசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.