சென்னை: தமிழ்நாட்டில் நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்களும் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர்கள் மத்திய சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நில அளவை பணிகளை மேற்கொள்வதற்கு என நிபுணத்துவம் பெற்று அந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், எந்தவித பயிற்சியும் இன்றி கிராம நிர்வாக அலுவலர்களை நில அளவை பணியில் ஈடுபட அனுமதிப்பது சட்ட விரோதம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, "இரண்டு பதவிகளுக்கும் அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்புதான். மேலும், நில அளவை பணிகளை மேற்கொள்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
லட்சக்கணக்கில் நிலுவை: நசர்வே எண்களின் உட்பிரிவுடன் பட்டா வழங்கக் கோரி ஆன்லைனில் விண்ணபித்த மனுக்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருப்பதால், அதனை விரைந்து வழங்கும் வகையில்தான் கிராம நிர்வாக அலுவலர்கள் அளவை பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அரசின் உத்தரவை எதிர்த்து சங்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு உரிமையில்லை" என குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், "பணி தொடர்பான விவகாரத்தில் அரசின் உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வழக்கு தொடரலாமே தவிர, அவர்களின் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை"என உத்தரவு பிறபித்து மனுவை தள்ளுபடி செய்தார்.