சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆறுமுகசாமி ஆணைய தரப்பும், சசிகலா தரப்பும் தன் தரப்பு விசாரணையை நிறைவு செய்துள்ளனர். அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேற்று(ஏப்ரல் 18) மறு விசாரணை மேற்கொண்டனர்.
அப்பல்லோ மருத்துவர்கள் விஜயசந்திர ரெட்டி, ஆபிரகாம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் நந்தகுமார் ஆகியோர் தங்களுடைய வாக்குமூலங்களை அளித்தனர். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து அப்பல்லோ வழக்கறிஞர்கள் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
அப்போது நீதியரசர் ஆறுமுகசாமி குறுக்கிட்டு ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் இருந்ததா என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அப்பல்லோ மருத்துவர் கிரிநாத், வெளிநாடுகளுக்கு இணையான சிகிச்சை முறை அப்பல்லோ மருத்துவமனையில் இருப்பதாகவும், கடுமையாக உழைக்கக்கூடிய மருத்துவர்கள் இருப்பதாலும் அதற்கான அவசியம் எழவில்லை என வாக்குமூலம் அளித்தார்.
இதையும் படிங்க:சுயநினைவின்றி இருந்தார் ஜெயலலிதா- அப்போலோ மருத்துவர் விளக்கம்