சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவர்கள் குழுவை அமைத்து எய்ம்ஸ் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணையை மீண்டும் தொடர்வது, யார் யாருக்கு அழைப்பாணை அனுப்பலாம், எவ்வாறு விசாரணையை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று (பிப்ரவரி 16) ஆலோசனை நடத்தியது.
தேவைப்பட்டால் குறுக்கு விசாரணை
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்போலோ நிர்வாக வழக்கறிஞர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பரிந்துரைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய ராஜா செந்தூர்பாண்டியன், "ஆஜரானவர்களில் பெரும்பாலானோரிடம் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துவிட்டார்கள். யார் யாரை கூடுதலாக விசாரிக்கலாம் என்பதை ஆணையம் முடிவுசெய்யும். அவ்வாறு ஆணையம் விசாரணை நடத்தும்பட்சத்தில் தேவைப்பட்டால் குறுக்கு விசாரணை மேற்கொள்வோம்.
புதிய குழு அமைப்பு
மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், குழுவுக்கு எந்தவிதமான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என அப்போலோ தரப்பு கேட்டது. அதற்கு அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி கூறினார். மேலும், இன்றைய தினம் ஆணையத்தில் தெரிவித்த கருத்துகள் அனைத்தையும் வரும் 22ஆம் தேதி எழுத்துப்பூர்வமாகத் தாக்கல்செய்ய இருக்கிறோம்.
இதற்கிடையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எய்ம்ஸ் அமைத்த மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த எட்டு மருத்துவர்களில் மூவர் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்திருந்ததால் அவர்களை விடுவித்து, புதியதாக ஆறு பேர் கொண்ட குழுவை எய்ம்ஸ் அமைத்துள்ளது. இதற்கான உத்தரவை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் இயக்குநர் கடிதம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.