சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும்ம் நிறைவேற்றினாலும் மூன்று ஆண்டுகளாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பெண்மணி மரணம் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல யார் தவறு செய்தாலும் அவர்களைக் கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத் தருவோம் எனவும் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்று நிலுவையில் உள்ள வழக்கு குறித்து பேரவையில் பேசக் கூடாது என்றார். இதனை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று துணை சபாநாயகரிடம் கோரிக்கைவைத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய துரைமுருகன், "நிலுவையிலுள்ள வழக்குகளைச் சட்டப்பேரவையில் பேசக் கூடாது என்றாலும் பெயர் குறிப்பிடாமல் வழக்கின் தன்மையைக் குறித்து பேசுவதற்கு உரிமை உண்டு. இந்த விவாதத்தை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
இந்த விவாதம் குறித்து பதிலளித்த துணை சபாநாயகர், இந்த விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல் வழக்கின் தன்மை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. ஆகையால் இதனை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மூன்று ஆண்டுகள் என்பதை நீக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார்.