சென்னை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புறப்பாடு விமானங்கள் சிறிதுநேரம் தாமதமாக இயக்கப்பட்டு வந்தன. மேலும், நேற்றும் (நவ. 10) இன்றும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஓடுபாதையில் மழைநீர்
மேலும், நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை, மின்மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் மோசமான வானிலை நிலவுவதாலும், காற்றின் வேகம் அதிகளவில் இருப்பதாலும் விமானங்கள் தரை இறங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
5 மணிநேரம் சேவைகள் நிறுத்தம்
இதனால், சென்னை விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1:15 மணி முதல் மாலை 6 மணி வரை வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் ஏதும் ரத்து செய்யப்படவில்லை. புறப்பாடு விமானங்கள் தொடர்ந்து இயங்கும் எனவும், மாலை 6 மணிக்குப் பிறகு வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவைகள் தொடரும் எனவும் விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்து காத்த பெண் காவலர்