சென்னை: துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை வழக்கம் போல சுங்கத்துறையினர் கண்காணித்துப் பரிசோதித்து அனுப்பினர்.
அப்போது சென்னையை சேர்ந்த 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து 3 பேரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
சோதனையில் சிக்கினர்
அவர்களுடைய டிராலி சூட்கேஸ் மற்றும் பைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி, ஐக்கிய அரபு திர்ஹாம்ஸ், குவைத் தினார், பக்ரைன் தினார், ஓமன் ரியால் போன்ற வெளிநாட்டுப் பணம் கட்டுகட்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
மூவரும் கடத்தல் குருவிகள்
3 பயணிகளிடமிருந்து இந்திய மதிப்பிற்கு ரூ.55.29 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அதோடு 3 பயணிகளின் துபாய் பயணத்தை ரத்து செய்தனர்.
அதோடு அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து, கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்றும், இவர்கள் 3 பேரும் கடத்தல் குருவிகள் என்றும் தெரிந்தது.
எனவே, இவர்களிடம் இந்த ஹவாலா பணத்தைக் கொடுத்து அனுப்பிய முக்கிய புள்ளி யாா்? என்று தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஸ்டாலின் மனு