சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரை சென்னை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை-எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (ஏப்.30) மாலை 4 மணியளவில் பெரியார் திடலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். எழும்பூர் ரயில் நிலைய பதாகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கச் சென்றனர். அப்போது ரயில் நிலையம் அருகிலுள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகே, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் கி.வீரமணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மெட்ராஸ் மாநிலத்தின் கடைசி முதலமைச்சர்!