சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஐ.சி.எம்.சி. லிமிடெட் என்ற பெயரில் வேளாண்மைக்கு உரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவரும் கண்ணன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
காவல் ஆணையரிடம் புகார்
அந்தப் புகாரில் மத்திய பொதுத் துறை நிறுவனமான ஐ.டி.ஐ. லிமிடெட்டில் தமிழ்நாடு, புதுச்சேரியின் துணைப் பொது மேலாளர் பொறுப்பில் இருந்த கே.வி.என். ராஜன் என்பவர் தங்கள் நிறுவனத்திடம் கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்கத் தேவைப்படும் பாதுகாப்புச் சாதனங்களான முகக்கவசம், கையுறை போன்ற பொருள்கள் அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆகையால், இப்பொருள்களைக் கொள்முதல்செய்ய தங்கள் நிறுவனத்திற்கு ஆணை கிடைத்துள்ளதாகவும், ஆனால் அரசு நிறுவனத்தால் முன்பண முதலீடு செய்ய இயலாது எனவும் கூறினார்.
எனவே தனியார் நிறுவனம் முதலீடு செய்தால் முகக் கவசம், கையுறை ஆகிய பொருள்களை கொள்முதல் செய்து மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யலாம் எனத் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.
புகார் மனு
மேலும், அப்படிச் செய்தால் குறைந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதன் அடிப்படையில் கே.வி.என். ராஜனின் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட உத்தரவின்படி, அவர் அறிமுகம் செய்த நிறுவனங்களுக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் சொன்னபடி எவ்வித பொருள்களையும் தங்களுக்கு விநியோகம் செய்யாமல் தங்கள் தொழிலுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டு தங்களுக்கு நம்பிக்கை மோசடி செய்த மத்திய அரசு அலுவலர் கே.வி.என். ராஜன் உள்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறியிருந்தார்.
கைது நடவடிக்கை
அந்தப் புகார் மனுவானது சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு ஆவணங்கள் நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், போலி ஆவணங்கள் மூலம் கண்ணன் என்பவரை ஏமாற்றி மூன்று கோடியே 20 லட்சம் ரூபாயை முறையற்ற வகையில் தனக்கு வேண்டப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு அனுப்பவைத்து அவர்களிடம் கமிஷனாக லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்ற இவ்வழக்கின் முதல் குற்றவாளியான கே.வி.என். ராஜனை கடந்த ஆகஸ்ட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைதுசெய்தது.
மேலும் ஒருவர் கைது
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், இவ்வழக்கில் தொடர்ந்து மேற்கொண்டுவந்த விசாரணையில் கே.வி.என். ராஜன் செய்த நம்பிக்கை மோசடிக்கு உறுதுணையாக அவரது நெருங்கிய கூட்டாளியும், ஐகான் ஆபிஸ் எக்யுப்மென்ட்ஸ் (Icon Office Equipments) என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான ஞானபிரகாசம் (52) இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அதனடிப்படையில், சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவரை வழக்கின் 5ஆம் குற்றவாளியாகச் சேர்த்ததுடன், அவரை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைதுசெய்தனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட ஞானபிரகாசத்தை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல் துறையினர் அவரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 715 பேருக்கு கரோனா பாதிப்பு!