சென்னை: 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைககள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது திருப்புதல் தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மே மாதம் பொதுத்தேர்வு: மேலும் பொதுத்தேர்வை எந்தவிதமான பிரச்சனைகளுக்கும் இடம் தராமல் பாதுகாப்புடன், உரிய வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "12ஆம் வகுப்பில் 8,37,313 பேர் உட்பட மொத்தம் 26,76,675 மாணவர்கள் மே மாதம் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தேர்வு நேரத்தில் 3,500 பறக்கும் படைகள் அமைக்கப்படவுள்ளன.
மாணவர்களை பரிசோதிக்கிறோம் என்ற வகையில் மாணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். மேலும் கேள்வித்தாள் தனியார் அச்சகங்களில் மாவட்ட அளவில் அச்சிடப்பட்டது. அங்கிருந்து கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என தெரிகிறது.
உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வு: எனவே இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தொழில் செய்ய முடியாதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு பொதுத்தேர்வு எனக்கும் தேர்தல் போல தான். பிரச்சனை இன்றி நடத்தி முடிக்க வேண்டும் என்பதே எனக்கு முக்கியமானது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வினாத்தாள் மதியம் நடைபெறும் தேர்விற்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் பாழடைந்த பள்ளிக்கட்டடங்களில் ஏற்கனவே 10 ஆயிரம் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. விரைவில் மீதம் இருக்கக்கூடிய கட்டடங்களும் இடிக்கப்படும். அந்த பள்ளி வளாகங்களில் பயின்று வந்த மாணவர்கள் அருகாமையிலுள்ள வாடகை கட்டடங்களில் கல்வி பயில்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாட்டில் 415 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது குறித்து கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அதற்குரிய குழு அமைக்கப்படும்.
நீட் தேர்வுக்கு தயாராக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு தேவைப்படும் போது, நேரடி பயிற்சி குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம். இல்லம் தேடி கல்வி திட்டத்தை டெல்லி துணை முதலமைச்சர் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டார். டெல்லி மாநிலத்தில் 1,100 அரசுப் பள்ளிகளே உள்ளன. நம்மிடம் சுமார் 38,000 அரசுப் பள்ளிகள் உள்ளன. அப்படியே அங்கிருப்பதை கொண்டு வந்துவிடமுடியாது. நல்ல திட்டங்களை ஏற்றுக்கொள்வோம்" என்றார்.
இதையும் படிங்க: அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு