சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் 3ஆவது அலை குறைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளின் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலை இருந்து வந்தது.
தற்போது தொடர்ச்சியாக வகுப்புகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில், 10,11,12ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் முதல் பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பள்ளிகளில் இதர வகுப்புகளும் மே 13ஆம் தேதி வரை செயல்பட உள்ளது. இதையடுத்து, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு முழு ஆண்டுத் தேர்வு கிடையாது என தகவல் வெளியாகின.
கற்கும் திறன் பாதிப்பு: இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா கூறியதாவது, "ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெறாது என வெளியான செய்தி தவறு. குறிப்பாக, ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் வகுப்புகள் செயல்படாத நிலையில், மாணவர்களுடைய கற்கும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும், 1 முதல் 8ஆம் வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்கவேண்டும் என்பது இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி விதியாக உள்ளது. இருப்பினும், ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, நடப்பு ஆண்டிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி அளவிலான ஆண்டுத்தேர்வுகள் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி திமுக விழாவில் மாயமான தமிழச்சி தங்கப்பாண்டியனின் செல்போன்