சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
உடற்கல்வி இயக்குநர் நிலை 1, முதுகலை கணினி ஆசிரியர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கடந்தாண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைன் மூலம் பெற்றது.
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு எழுத இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வுகள், வரும் பிப்ரவரி 12ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதிவரை காலை, மாலை இருவேளைகளிலும் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்விற்கான கால அட்டவணை இன்று(ஜன.28) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்விற்குரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் பதிவுசெய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம், அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் ஆங்கிலம், கணக்கு, கணினி அறிவியல் பாடங்களுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும். இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் கரோனா பெருந்தொற்றின் சூழ்நிலையைப் பொறுத்து மாறுதல் செய்யப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்வு தேதிகள் கீழ்க்காணுமாறு,
பிப்ரவரி 12ஆம் தேதி - தமிழ்
பிப்ரவரி 13ஆம் தேதி - வணிகவியல், மனை அறிவியல், இந்திய கலாசாரம், இயற்பியல்
பிப்ரவரி 14ஆம் தேதி - புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல்
பிப்ரவரி 15ஆம் தேதி - தாவரவியல், உயிர் வேதியியல், விலங்கியல், உடற்கல்வி இயல்
இதையும் படிங்க: கைக்குழந்தை இருக்கையில் ஏன் தற்கொலை செய்துகொண்டார் எடியூரப்பாவின் பேத்தி?