சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் பாடப்பிரிவில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் கம்பியூட்டர் துறையில் 8 பாடப்பிரிவுகளும், முதுகலைப்படிப்பில் 2 பாடப்பிரிவுகளும் நடப்பாண்டில் நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது.
அத்துடன் மேலும், 221 பொறியியல் கல்லூரிகளில் மேலும் 13,331 இடங்களில் மாணவர்கள் சேர்ப்பதற்கும் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டு கல்வியாண்டில் 2,23,676 இடங்கள் இருந்த நிலையில், 2022-23ஆம் ஆண்டு கல்வியாண்டில் 2,32,872 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 9,196 இடங்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு இல்லாததால், மாணவர்கள் சேராமல் உள்ள பிரிவுகளில் இடங்களைக் குறைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பினை வழங்கி வரும் கல்லூரிகள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்கழகத்தின் அனுமதியையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னர் பெறவேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் 2022-23ஆம் ஆண்டு கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க். எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.சி.ஏ ஆகிய தொழில் கல்விப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் ஜன.10ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரையில் அபராதம் இல்லாமலும், மே 7ஆம் தேதி வரையில் ரூ.50,000 அபராத்துடனும் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.
கடந்தாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 494 தனியார் கல்லூரிகள், 4 அண்ணா பல்கலைக்கழகதுறைக் கல்லூரிகள், 13 உறுப்புக்கல்லூரிகள், 3 மண்டலக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 14 கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 10 கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மூடப்பட உள்ளன. பாடப்பிரிவு வாரியாக சிவில் இன்ஜினியரிங் 13 கல்லூரியில் 480 இடங்கள், ஆர்க்கிடெக்சர் 2 கல்லூரியில் 80 இடங்கள், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ் 5 கல்லூரியில் 72 இடங்கள், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் 4 கல்லூரியில் 63 இடங்கள், கம்பியூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் 5 கல்லூரியில் 63 இடங்கள், ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் 2 கல்லூரியில் 60 இடங்கள், கெமிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் தலா இரண்டு கல்லூரியில் 60 இடங்கள், கம்பியூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் 2 கல்லூரியில் 60 இடங்கள், பவர் சிஸ்டம் இன்ஜினியரிங் 2 கல்லூரியில் 36 இடங்கள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, கம்ப்யூட்டர் அறிவியல் துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் உள்ளதால், மாணவர்கள் சேர்க்கை இடங்களும், பாடப்பிரிவிற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. பி.டெக் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ் இன்ஜினியரிங் (B.Tech - AI & Data Science) 83 கல்லூரிகளில் 4140 இடங்களும், இன்ஃபெர்மேஷன் டெக்னாலாஜி 26 கல்லூரியில் 1,320 இடங்களும், கம்பியூட்டர் சயின்ஸ் அண்டு பிசினஸ் சிஸ்டம் 20 கல்லூரியில் 960 இடங்களும், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் 8 கல்லூரியில் 330 இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பி.இ. கம்பியூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் (Cyber security) 30 கல்லூரிகளில் 1608 இடங்களும், கம்பியூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் (Artificial Intelligence & Learning) 24 கல்லூரியில் 1308 இடங்களும், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் 11 கல்லூரியில் 570 இடங்களும், கம்பியூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் (Internet of Think) 5 கல்லூரியில் 300 இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
எம்பிஏ படிப்பில் 11 கல்லூரியில் 768 இடங்களும், எம்சிஏ படிப்பில் 3 கல்லூரியில் 240 இடங்களும் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 89 கல்லூரியில் 3282 இடங்களும், சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 52 கல்லூரியில் 1560 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 32 கல்லூரியில் 874 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 28 கல்லூரியில் 756 இடங்களும், கெமிக்கல் இன்ஜினியரிங் 10 கல்லூரியில் 360 இடங்களும், ரோபோடிக்ஸ் அண்டு ஆட்டோமேஷன் 3 கல்லூரியில் 240 இடங்களும், அக்ரிகல்சூரல் இன்ஜினியரிங் 7 கல்லூரியில் 240 இடங்களும், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 4 கல்லூரியில் 180 இடங்களும், ஆட்டோமாெபைல் இன்ஜினியரிங் 4 கல்லூரியில் 150 இடங்களும், மெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Mechatronics Engineering) 5 கல்லூரியில் 150 இடங்கள் என 7792 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு பருவத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு