சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கையின்படி, படிக்கும்போதே மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் ‘ஸ்வயம்’ திட்டத்தில் இணைந்து ஆன்லைன் மூலம் பாடங்களைப் படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் அவர்கள் சேருகின்ற படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி மீண்டும் அதே பிரிவில் சேர அனுமதிக்கக்கூடிய புதிய நடைமுறையினையும் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் அக்டோபர் 30ஆம் தேதி துணைவேந்தர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகங்கள் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தினார்.
ஆனால், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உயர் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு 2021 ஆண்டில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையில், கலை அறிவியல் படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அவர்கள் சேருகின்ற படிப்பிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு, அவர்கள் விரும்பும் பயிற்சிகள் பெறவும், சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து படிக்கவும், துறை சார்ந்து பணி அனுபவம் பெறவும் மாணவர்கள் அவர்கள் சேரும் படிப்பிலிருந்து பாதியில் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினாலும் சான்றிதழ்
அதன்படி கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவர் ஓராண்டிற்குப் பிறகு விலகினால் அவர்களுக்குச் சான்றிதழும், இரண்டு ஆண்டுகள் கழித்து விலகினால் அவர்களுக்கு பட்டய (டிப்ளமோ) சான்றிதழும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு விலகினால் அவர்களுக்கு பட்டயப் படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும் எனப் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கையிலான அதே நடைமுறையைக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தாங்கள் சேர்ந்து பயில்கின்ற படிப்பிலிருந்து வெளியேறி ஓராண்டு காலம் இடைவெளி எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்லவும், வேலை சார்ந்த பயிற்சிகள் பெறவும் மாணவர்களை அனுமதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஸ்வயம் திட்டம்
இதன்படி ஓர் ஆண்டிற்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் அதே பாடப் பிரிவில் சேர்ந்து பயில முடியும். அதேபோல் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே ஒன்றிய அரசின் ஸ்வயம் திட்டத்தில் ஆன்லைன் மூலம் சேர்ந்து சான்றிதழ் படிப்புகளைப் படிக்கலாம்.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கு மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனக் கூறிவரும் நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் வழிகாட்டுதல் அடிப்படையில் பல்வேறு வழிகளில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு