சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். பி.ஆர்க்., எம்.இ, எம்.டெக்,. எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்ஸி. போன்ற படிப்புகள் உள்ளன.
கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்
இந்த மேற்கண்டப் படிப்புகளை நடத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், அதற்கு முன்னர் அந்த பாடப்பிரிவுகளை நடத்த உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் முதலில் அண்ணாப் பல்கலைக் கழகத்திடம் அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றினைப் பெற வேண்டும்.
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தினை 2022-23ஆம் கல்வியாண்டிற்கு பெறுவதற்கு இணையதளத்தின் மூலம் ஜன.10ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகள் ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவிக்கும் தகவல்களை நேரடியாகவும் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் அனுமதி
மேலும், இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களின் விவரங்களுடன், அவர்களின் ஆதார் எண்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இது தொடர்பாக, கல்லூரிகளில் உள்ள கட்டமைப்புகளின் விவரங்களை ஜியோ மேப் மூலம் பதிவு செய்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லூரியில் தேவையான கட்டமைப்புகளை முழுமையாக உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆய்வு
மேலும், தற்பொழுது கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்புகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் இருப்பதால், Artificial Intelligence Technology, Data Science Technology ஆகிய புதியப்படிப்புகளை துவங்குவதற்கு சில கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு தங்களின் கல்லூரியில் சிலப் பாடப்பிரிவுகளை மூடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் விண்ணப்பம் செய்துள்ளனர் என அண்ணா பல்கலைக் கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெள்ளி படிச்சட்டத்தை திருடிய அர்ச்சகர்கள் - திடுக்கிடும் வாக்குமூலம்